கவிஞன் யானோர் காலக் கணிதம்

Wednesday, February 20, 2008

 

கல்லூரியில் படித்து, வியந்து ரசித்த ஒரு கண்ணதாசன் கவிதை.








கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்
இவை சரி யென்றால் இயம்புவ தென்தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை
ஆக்கல் அளித்தல் அழித்தலிம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை அறிக!
செல்வர்தன் கையிற் சிறைப்பட மாட்டேன்
பதவிவா ளுக்கும் பயப்பட மாட்டேன்

பாசம் மிகுத்தேன் பற்றுதல் மிகுத்தேன்
ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்
உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்
இல்லா யினெமர் இல்லந் தட்டுவேன்
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்
பண்டோர் கம்பன் பாரதி தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்

புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!


வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு
கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்
மாற்றம் எனது மானிடத் தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்தே ஏகுமென் சாலை
தலைவர் மாறுவர் தர்பார் மாறும்
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்

கொள்வோர் கொள்க குரைப்போர் குரைக்க
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது
நானே தொடக்கம் நானே முடிவு
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!


- கவிஞர் கண்ணதாசன்

6 comments:

Unknown said...

இந்த பாடலுக்கு விளக்கம் வேண்டும்

Unknown said...

இந்த பாடலுக்கு விளக்கம் வேண்டும்

Unknown said...

இந்த பாடலுக்கு விளக்கம் தாருங்கள்

Unknown said...

பாடல் வழக்கம்??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

Unknown said...

This song taught in 12th std sirapputamil

Anonymous said...

நேரடி பொருள் தான். பொருள் விளக்க என்ன உள்ளது ?