உலகினை தூர் வாரவேண்டுமே!!

Wednesday, July 16, 2008

0 comments  


கற்றது தமிழ் திரைப்படத்தில் உள்ள இந்த பாடல் எவ்வளவு பிரபலமென்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் தீப்பொறி! மெட்டுக்கு ஏற்றாற்போல் வார்த்தைகளை திணிக்காமல் சொல்லவந்ததை அழகாகவும் ஆழமாகவும் சொல்லும் வரிகள். நா.முத்துகுமாரின் படைப்பு இது. சுரணை உள்ள தமிழனுக்கு நரம்பு புடைக்கும்!!!!











வாழ்க்கை என்பது வெட்டுக்கத்தி
வலிக்க வலிக்க தொட்டுப்பார்த்தேன்
குறுக்கு வெட்டு தோற்றத்தில்
வலியை கொஞ்சம் வெட்டிப்பார்த்தேன் (2)

இது வேறு உலகம் ஓஹோ!
இது பத்தாம் கிரகம் ஓஹோ!
இறைவா இங்கே
நீயும் வந்தால் மிருகம்!

இது வேறு உலகம் ஓஹோ!
இது பத்தாம் கிரகம் ஓஹோ!
இறைவா இங்கே
வந்தால் நீயும் மிருகம்!

கற்றதால் பெற்றதோ பெரும் வாழல்லவா?
குத்துதே கொத்துதே பல பாம்பல்லவா?
எங்கு போயினும் பேய்களே!
எலும்பு தின்றிடும் நாய்களே!
எட்டு திக்கிலும் பொய்களே
இங்கு அலைகின்றதே

கேட்டதால் பெற்றதோ பெரும் வலியல்லவா?
கொன்றதால் கண்டதோ புது வழியல்லவா?
எங்கு நோக்கிலும் அம்மணம்
ஏற்று கொள்ளுமா என்மனம்
ஆடி தீர்குதே சன்னதம்
ரத்தம் கொதிக்கின்றதே!

உலகினை தூர் வாரவேண்டுமே!
உண்மை மட்டும் வாழவேண்டுமே!
கனவுகள் கை கூட வேண்டுமே!
கொள்ளும் கோபம் கூட வேண்டுமே!
எனக்கென புது பூமி வேண்டுமே!
தமிழ் தான் அங்கே வேண்டுமே!
தமிழனுக்கினி ரோசம் வேண்டுமே!
எச்சில் இதயம் மாரவேண்டுமே!

அடடா இது நடக்குமா?
என் பூமி எனக்கு கிடைக்குமா? ஓ!
அது வரை நெஞ்சம் பொறுக்குமா?
என் தொன்மத்தமிழினம் பிழைக்குமா? ஓ?

அகம் புறம் என இரண்டு பிரிவிலே
அகிலம் ஆண்டது எங்கள் தமிழினம்
அடுத்தவர் தமை சீண்டி பார்க்கையில்
எலும்பை நொறுக்கும் எங்கள் தமிழ் குணம்!

மழை - சிறுகதை

Wednesday, July 2, 2008

2 comments  


அவதி அவதியாக வாடிக்கை எல்லாம் முடித்து நேரத்தை பார்த்தான் சடையன். சிறிய முள் மூன்றையும் பெரிய முள் பனிரெண்டையும் நெருங்கி கொண்டிருந்தன. வாரமெல்லாம் இயந்திரமாக சுழன்றவனுக்கு இன்னும் சற்று மணிகளில் ஞாயிற்றுகிழமையும் முடிய போவதென்று நினைத்தாலே கவலையாக இருந்தது. இப்போது கிளம்பினால் எப்படியும் சூரியன் மறையும் முன் அந்த இடத்தை போய் சேர்ந்திடலாம என்று பையில் புகைப்பட பெட்டியை போட்டு தோளில் மாட்டினான். செருப்பு காலோடு அவசவசரமாக சட்டியில் இருந்த உணவை நாக்குக்கு சுவை தெரிய கூட நேரம் கொடுக்காமல் தொண்டைக்குள் அனுப்பினான்.

சன்னல் திரையை நீக்கி பார்த்தவன் முகத்தில் ஏமாற்றம். எங்கிருந்து வந்தன இந்த முனகும் மேகங்கள்? "மழையா?" என்று வாய் விட்டு கேட்டான்! உதடுகளை பிதுக்கி ஏமாற்றத்தில் தலையை இருபுறமும் வேகமாக ஆட்டினான். ஆத்திரம் பெருக்கெடுக்க அசிங்கமான வார்த்தையில் திட்டினான். வேறு யாரை? ஆண்டவனை!

கோபமாக நாற்காலியில் அமர்ந்து மௌனமானான். வெறிச்சோடிய அந்த வீட்டை அங்கும் இங்கும் பார்த்து ஏதோ எண்ணத்தில் ஆழ்ந்து போனான். சுள்ளென்று வெயில் மீண்டும் வீட்டுக்குள் வர, சன்னலை போய் எட்டி பார்த்தவனுக்கு காதலியை கண்டது போல இன்பம். எங்கே போயின அந்த மேகங்கள்? துள்ளி குதித்து பையில் கொஞ்சம் சில்லறையை அள்ளிப்போட்டு வீட்டை பூட்டிவிட்டு கிளம்பினான். போய் நின்றதும் ரயில் வண்டி வர, சன்னலோர இருக்கை ஒன்று தேடி ஓரமாய் அமர்ந்தான்.

ஊருக்கு சற்று தொலைவில் சின்ன சின்ன மலை போன்ற மேடுகளை தாண்டினால் அந்த இடத்தை போய் சேரலாம். அவன் இருக்கும் இடத்திலிருந்து மூன்றாவது இரயில் நிலையம். நிறைய பசுமை. அவனுக்கு பெயர் தெரியாத பல பூக்கள். முற்புதர்கள். பாறைகள். அங்கிருக்கும் இடிந்துபோன மண்டபத்தில் மிஞ்சி நிற்கும் ஒரு சுவரும் அந்த இரும்புக்கதவும் தன்னிடம் ஏதோ சரித்திரம் சொல்வதாகவே அவனுக்கு நினைப்பு. ஆள் அரவம் அற்ற அந்த இடத்தை சில மாதங்களுக்கு முன் முதல் முறை கண்டவனுக்கு ஏதோ சொர்கத்தை பார்த்த மகிழ்ச்சி. அன்று பாய்ந்து பாய்ந்து படமெடுத்தான். வழி தவறிய ஆட்டுக்குட்டி மந்தைய வந்து சேர்ந்தது போல மனசுக்குள்ள துள்ளி குதித்தான். எத்தனை முறை சென்றாலும் அவனுக்கு சற்றும் சலிக்காத இடம் அது. மனிதர்களுக்கு புரியாத அவன் உணர்வுகளை அந்த இடத்தில் உள்ள அனைத்தும் முழுதாய் புரிந்து கொள்வதாக ஒரு எண்ணம் அவனுக்கு.

சன்னலில் தலை சாய்த்து ஏதோ நினைவில் அழ்ந்து போக, மேகம் மீண்டும் சூழ்ந்ததை அவன் கவனிக்கவில்லை. இறங்க வேண்டிய இடம் வந்ததும் யாரோ தட்டி எழுப்பியது போல தெளிவானான். இருட்டி போன வானத்தை சோகத்துடன் அண்ணார்ந்து பார்த்தபடியே ரயிலிலிருந்து இறங்கினான். இவ்வளவு தூரம் வந்து திரும்புவதா? அடுத்த இயந்திர வாரத்தை நினைவில் எண்ணி, என்னவானாலும் சரியென்று அந்த இடத்தை நோக்கி நடை போட்டான். அந்த இடத்தை நெருங்கும் போதே அவனை வரவேற்பது போல காற்றில் தலை ஆட்டிகொண்டிருந்தது அவனுக்கு பெயர் தெரியாத அந்த வெள்ளை பூ. மனதில் இருந்த எல்லா உணர்வும் நீங்கி புன்னகைத்தான் சடையன். கையில் அள்ள முடியாத அந்த இடத்தை தழுவிக்கொள்ள ஆவல் வந்தது. அந்த பூவின் இதழை வருடிக்கொடுத்து தர்பாரில் மன்னன் நடை போடுவது போல, பெருமையோடு இருபுறமும் நோக்கி கொண்டே நடந்தான். ஆம் அது அவனுக்கு சொந்தமான கோட்டை என்றுதான் நினைப்பு அவனுக்கு. புது மலர்கள், உதிர்ந்த இலைகள், அரும்பாத மொட்டு, தனது முள்ளில் குத்தியே கிழிந்த இலை என்று எல்லாவற்றையும் தன் புகைப்பட பெட்டியில் பதிவு செய்தான். அவன் பதிவு செய்வது பொருட்களை அள்ள. நிகழ்வுகளை, அந்த இடம் அவனுக்குள் பொங்க செய்யும் உணர்வுகளை.

பத்து படம் எடுப்பதற்குள் பொழிய துவங்கியது வானம். தூரல் பெரும் மழையாக மாற புகைப்பட பெட்டியை பார்த்தபடியே அந்த மண்டபம் நோக்கி ஓடினான். "இன்னும் கொஞ்சம் நேரம் பொறுக்க உன்னால் முடியாதா?" என்று கேட்பவன் போல அந்த இரும்புக்கதவோரம் ஒண்டிக்கொண்டு வானத்தையே பார்த்து கொண்டிருந்தான். மழை நிற்பதாக தெரிய வில்லை. புகைப்பட பெட்டி நனையாமல் வீடு சேருவதெப்படி என்று யோசித்தான். கால்களில் ஈரம் ஏற சோகம் தலைக்கேறியது. அவன் சோகம் புரிந்தது போல மேகங்கள் உடனே கலைந்தன. எட்டிப்பார்த்தான் சூரியன். சடையன் கண்களில் புன்னகை. அடுத்த மழை வருமுன் இன்னும் பத்து படமாவது எடுத்துவிட்டு வீட்டிற்கு ஓட நினைத்தான். வரும் வாரமெல்லாம் பார்த்து ரசிக்க இந்த இருபது படம் அவனுக்கு போதும். வேகமாக ஓடினான் படமெடுக்க. இதுவரை பார்த்திராத அழகில் அந்த இடம். மழைத்துளி இல்லாத இதழோ இலையோ இல்லை. அஸ்தமிக்க காத்திருக்கும் சூரியனின் மஞ்சள் கதிர்கள் அந்த துளிகளுக்குள் புகுந்து அவன் கண்களில் சேர்ந்த போது செத்துப்போனான். அந்த அமைதியான அழகு அவனை நிலை மறக்க செய்தது. அது என்ன உணர்வென்றே தெரியவில்லை அவனுக்கு. இத்தனை அழகை அவன் எங்கேயும் பார்த்ததில்லை. இத்த உணர்வை எதுவும் அவனுக்கு தந்ததில்லை. மீண்டும் ஓடி படமெடுத்தான்.

திடீரென்று ஏதோ ஆழமான ஒன்றை உணர்ந்து நிமிர்ந்தான். தொண்டை குழி அடைத்தது. எதையோ ஆவலாக எதிர்பார்ப்பது போல அண்ணார்ந்து வானத்தை பார்த்தான். மீண்டும் தூரல். நனைந்து போக தயாரானவனாக அசையாது நின்றான் கண்களை சற்றும் மூடாமல். கண்ணில் விழுந்த துளி ஒன்று வழிந்தோடி உதடுகளை சேர அது கரித்தது.