பாரதிதாசன் கவிதை இது.
புரட்சி பொறி பறக்கும் ஒரு கவிஞன் ஒரு பெண்ணின் மெல்லிய உணர்வுகளையும் இத்தனை அழகாக எழுதியதில் அசந்து போனேன்!
...........................................................................................
இழுத்திழுத்து மூடு கின்றேன்
எடுத்தெடுத்துப் போடு கின்றாய்
பழிக்க என்றன் மேலாடையை தென்றலே - உன்னைப்
பார்த்து விட்டேன் இந்தச் சேதி ஒன்றிலே!
சிலிர்க்கச் சிலிர்க்க வீசு கின்றாய்
செந்தாழை மணம் பூசு கின்றாய்
குலுக்கி நடக்கும் போதிலே என் பாவாடை - தனைக்
குறுக்கில் நெடுக்கில் பறக்கச் செய்தாய் தென்றலே!
வந்து வந்து கன்னம் தொட்டாய்
வள்ளைக் காதில் முத்த மிட்டாய்
செந்தாமரை முகத்தினை ஏன் நாடினாய் - ஏன்
சீவியதோர் குருங்கழலால் மூடினாய்!
மேலுக்குமேல் குளிரைச் செய்தாய்
மிகமிகமிக் களியைச் செய்தாய்
உள்ளுக்குள்ளே கையை வைத்தாய் தென்றலே
உயிருக்குள்ளும் மகிழ்ச்சி வைத்தாய் - என் தென்றலே!
...........................................................................................
0 comments:
Post a Comment